பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதையொட்டி கேரளாவுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;

Update:2022-07-18 20:19 IST

பொள்ளாச்சி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதையொட்டி கேரளாவுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணை கேரள வனப்பகுதிக்குள் இருந்தாலும் பராமரிப்பு, நீர்வரத்தை கணக்கீடுதல், தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பணிகள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது.

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி, ஆழியாறு அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர்மட்டம் 70 அடி

இந்த நிலையில் கடந்த ஆண்டு அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு போதிய மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதன் காரணமாக 72 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் நேற்று 70 அடியை எட்டியதை தொடர்ந்து கேரளாவுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சோலையார் அணை நிரம்பியதை தொடர்ந்து மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் சேடல் பாதை வழியாக வினாடிக்கு 2,500 கன அடியும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் வினாடிக்கு 1,500 கன அடி நீர் வரத்து உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

பரம்பிக்குளம் அணை முழுகொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், கேரளாவுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கேரளாவில் உள்ள பெருங்கல்குத்து என்ற அணைக்கு சென்று சாலக்குடி வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. இதன் காரணமாக கோவை கலெக்டர் மற்றும் கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அணை நீர்மட்டம் 72 அடியை எட்டியதும் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்