அமராவதி ஆற்றின் குறுக்கே மடத்துக்குளம் அருகே அமைந்துள்ள பொன்னிகாட்டுத்துறை தடுப்பணையை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அமராவதி ஆற்றின் குறுக்கே மடத்துக்குளம் அருகே அமைந்துள்ள பொன்னிகாட்டுத்துறை தடுப்பணையை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.;

Update:2023-06-22 19:19 IST

போடிப்பட்டி

அமராவதி ஆற்றின் குறுக்கே மடத்துக்குளம் அருகே அமைந்துள்ள பொன்னிகாட்டுத்துறை தடுப்பணையை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல் தடுப்பணை

சுற்றுலாத் தலங்கள் என்பவை வெறும் பொழுதுபோக்கு இடங்களாக மட்டுமல்லாமல் கண்ணுக்கு குளிர்ச்சி தருவதாகவும், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.

பொதுவாக இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான இடங்களுக்கு மனதைக் கவரும் அந்த மந்திர சக்தி உண்டு. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கத்திலிருந்து ஆனைமலை செல்லும் சாலையில் பெருமாள் புதூர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அழகான பகுதி பொன்னிக்காட்டுத்துறை தடுப்பணையாகும்.

அமராவதி அணையிலிருந்து புறப்படும் அமராவதி ஆற்றின் முதல் தடுப்பணையாக இது உள்ளது.இந்த பகுதியைச் சுற்றிலும் தோப்புகள், மரங்கள் என பசுமை சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

தடுப்பணையைத் தாண்டி சலசலவென்று விழும் நீர்த்திவலைகளில் ஆனந்த நீராடவென்று சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

ஆனால் இந்த தடுப்பணைக்கு செல்லும் பாதை மேம்படுத்தப்படாமல் உள்ளது.செல்லும் வழித்தடத்தில் பல இடங்களில் சாலையோரங்களில் அச்சுறுத்தும் விதமாக புதர் மண்டிக் கிடக்கிறது.மேலும் தடுப்பணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிமகன்கள் முகாமிட்டு மது அருந்துகின்றனர்.

இதனால் அந்த பகுதிக்கு செல்வதற்கு பெண்களும் குழந்தைகளும் அச்சமடையும் நிலை உள்ளது.மேலும் குடிமகன்கள் ஆங்காங்கே காலி மது பாட்டில்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் வீசி தடுப்பணையை வீணாக்கி வருகின்றனர்.

பழமையான கோவில்கள்

நிலத்தடி நீராதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு உதவும் இந்த தடுப்பணையை பாதுகாப்பது அவசியமாகும்.

அதுமட்டுமல்லாமல் மடத்துக்குளம் பகுதிக்கு அருகில் அமராவதி, திருமூர்த்தி மலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில், குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட 1000 ஆண்டுகள் கடந்த பழமையான கோவில்களும் உள்ளன.

எனவே இந்த இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் பொன்னிக்காட்டுத்துறை பகுதி சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படவேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.எனவே பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி தடுப்பணை போல பொன்னிக்காட்டுத்துறை பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரமான சாலை வசதி, பாதுகாப்பான சூழல் ஆகியவற்றை உருவாக்கி, இது நம்ம ஊரு சுற்றுலா தலம் என்று பெருமைப்படும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்பது மடத்துக்குளம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.அதன்மூலம் பெருமாள்புதூர் என்னும் சிறு கிராமம் தொழில் வாய்ப்புகள் பெறவும் பொருளாதார மேம்பாடு அடையவும் வாய்ப்புகள் உருவாகும்.

Tags:    

மேலும் செய்திகள்