போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தாம்பரம் மாநகராட்சி மண்டலக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

தாம்பரம் மாநகராட்சி மண்டலக்குழு கூட்டத்தில் போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-07-26 04:40 GMT

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலக்குழு கூட்டம் நேற்று செம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடந்தது. இதில் மண்டலக்குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், 1 அ.தி.மு.க. கவுன்சிலர், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் என 4 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதனால் போதுமான கவுன்சிலர்கள் வரவில்லை என வருகை பதிவேட்டில் பதிவு செய்து, வேறு தேதியில் கூட்டம் நடைபெறும் எனக்கூறி கூட்டத்தை ஒத்தி வைத்தனர். இதனால் எந்த பணிகள் குறித்தும் பேசாமலேயே 5 நிமிடத்திலேயே அனைவரும் வெளியேறினார்கள்.

கடந்த முறை நடந்த கூட்டத்தில் தற்போது பங்கேற்ற 4 பேருடன் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 43-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கலந்துகொண்டார். மற்றவர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும் 3-ல் ஒரு பங்கு கவுன்சிலர்கள் கலந்து கொண்டதால் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

ஆனால் நேற்று கூட்டம் தள்ளி வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் தி.மு.க. கவுன்சிலர் ஜெகன், சிட்லப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கெடுத்தார். அதில், "நான் மாநகராட்சி மண்டலக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றபோது தி.மு.க. நிர்வாகியான கருணாகரன், என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பல்லாவரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அமர்த்திவிட்டார். இதனால் என்னால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இதனால் எனது மக்கள் பணி தடைப்பட்டுள்ளது" என கூறி இருந்தார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், புகாரை பெற்றதற்கான ரசீது கொடுத்து அனுப்பினர். மண்டலக்குழு கூட்டத்தில் பங்கேற்க விடாமல் வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று விட்டதாக தி.மு.க. நிர்வாகி மீது தி.மு.க. கவுன்சிலரே போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்