காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.;
சென்னை,
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் எம்.ஆர்.பி. நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் நேற்று 500-க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி. நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நர்சுகள் கலந்து கொண்டு கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை கலைந்து செல்லுமாறு போலீசார் மாலையில் அறிவுறுத்தினார்கள். ஆனால் கலைந்து செல்ல மறுத்ததால் பேராட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினர். பின்னர் அவர்களை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் நர்சுகள் அங்கேயும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும். செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது. போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த அரசு யாரையும் கைவிடாது. 8 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது. செவிலியர் பணியில் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்” என்று அவர் கூறினார்.