அக்னீஸ்வரர் கோவிலில் பரணி நட்சத்திர வழிபாடு
பொறையாறு அருகே அக்னீஸ்வரர் கோவிலில் பரணி நட்சத்திர வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்;
பொறையாறு:
பொறையாறு அருகே அக்னீஸ்வரர் கோவிலில் பரணி நட்சத்திர வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நல்லாடை அக்னீஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் 900 ஆண்டு பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பரணி பரிகார தலம் ஆகும். இத்தலத்தில் மூலவராக அக்னீஸ்வரர் சுந்தரநாயகியும் மற்றும் வினாயகர், முருகன், லெட்சுமி, சரஸ்வதி, மகாவிஷ்ணு, சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சனீஸ்வரர், துர்கை அம்மன், சண்டீகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேற்கு திசைநோக்கி அமைந்த சிவதலங்களில் இதுவும் ஒன்று.
இக்கோவிலில் அக்னீஸ்வரர் சாமிக்கு மேற்கு திசை நோக்கியும், சுந்தரநாயகி சாமிக்கு தெற்கு திசை நோக்கியும் சன்னதிகளுக்கு செல்ல தனித்தனியாக இரண்டு வழிகளை கொண்ட சிறப்பு மிக்க திருத்தலம் ஆகும். அர்த்தநாரீஸ்வரர் அனைத்து ஆலயங்களிலும் நின்ற கோலத்தில் இருப்பார். ஆனால் இவ்வாலத்தியில் அமர்ந்த கோலத்தில் இருப்பது தனி சிறப்பு.
பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு
சிறப்பு மிக்க இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பரணி நட்சத்திரத்தில் தோஷ பரிகார சிறப்பு யாகபூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அக்னிஸ்வரர், சுந்தரநாயகி ஆகிய சாமிகளுக்கு பால், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகார பூஜை செய்து வழிபாடு செய்தனர். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.