புதிய காய்கறி மார்க்கெட் கட்ட பூமி பூஜை
திருத்துறைப்பூண்டியில் புதிய காய்கறி மார்க்கெட் கட்ட பூமி பூஜை நடந்தது.;
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் பழைய பஸ் நிலையம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது.. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதில் சில நாட்களுக்கு முன்பு ஒரு கடை இடிந்து விழுந்தது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் புதிய காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பினார். இதை தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி காய்கறி அங்காடி கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு நேற்று புதிய காய்கறி மார்க்கெட் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. விழாவில் நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.