தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை -அமைச்சர் சிவசங்கர் பேட்டி

விதிமுறைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால் தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Update: 2023-06-09 23:56 GMT

கோவை,

கடந்த ஆட்சியின்போது போக்குவரத்து துறையில் புதிதாக டிரைவர், கண்டக்டர் நியமிக்கப்படவில்லை. ஆனால் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக டிரைவர், கண்டக்டரை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற அரசு போக்குவரத்து கழகங்களிலும் புதிதாக டிரைவர்-கண்டக்டர் நியமிக்கப்படுவார்கள்.

போக்குவரத்து கழகத்துக்கு கூடுதலாக 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் 2,400 பஸ்கள் வாங்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. 6 மாதத்துக்குள் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும்.

பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை

தமிழகத்தில் பைக், வாடகை வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே பைக் டாக்சியை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. பொதுவாக வாடகை வாகனங்கள் என்றால் அதற்கு தனியாக அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் வாடகை வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பைக் என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதை எப்படி வாடகைக்கு அனுமதிக்க முடியும். அவ்வாறு அனுமதிக்க விதிகள் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே தமிழக அரசை பொறுத்தவரை பைக்கை வாடகைக்கு விடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை

அரசு பஸ்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. சென்னையில் அதை அமல்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அங்கு கொண்டு வந்த பின்னர், மற்ற பகுதிகளுக்கும் சோதனை அடிப்படையில் கொண்டு வரப்படும். அதன் பின்னர் முழுமையாக அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவை மண்டலத்தில் உள்ள தலைமையகத்தில் டிரைவர்-கண்டக்டருக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்தனர். தொடர்ந்து புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பு மூலம் பஸ் நிறுத்த அறிவிப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.

பஸ்சில் சென்று ஆய்வு

அதை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் இருந்து சிவானந்தாகாலனி வரை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சிவசங்கர் ஆகியோர் அரசு டவுன் பஸ்சில் சென்று அந்த தானியங்கி அறிவிப்பு சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்