பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்
என் மண், என் மக்கள் பாதயாத்திரை குறித்து பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் காணொலி மூலம் அண்ணாலை பங்கேற்று பேசினார்.;
ராமேசுவரம்,
என் மண், என் மக்கள் பாதயாத்திரை குறித்து பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் காணொலி மூலம் அண்ணாலை பங்கேற்று பேசினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை `என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் ராமேசுவரத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி யாத்திரை பயணத்தை தொடங்குகிறார். இந்த பாதை யாத்திரை பயணத்தின்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். இந்த பாதயாத்திரை பயணத்தை 28-ந் தேதி ராமேசுவரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சி பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடக்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக ராமேசுவரம் மெய்யம்புளியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று பா.ஜ.க. தேசிய மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காணொலி மூலம் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷா பங்கேற்பு
கூட்டத்தில் கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பாலகணபதி, நரேந்திரன், விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் பவர் நாகேந்திரன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மண்டபம் கிழக்கு ஒன்றிய தலைவர் கதிரவன், ராமேசுவரம் நகர் தலைவர் ஸ்ரீதர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்னர் கட்சியின் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் கூறியதாவது:- என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை 28-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து யாத்திரை பயணத்தை தொடங்குகிறார். இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மாநில தலைவர் ராமேசுவரத்தில் நகரில் பல இடங்களில் யாத்திரை பயணம் மேற்கொண்டு இரவு ராமேசுவரத்தில் தங்குகிறார்.
பொதுமக்களுடன் சந்திப்பு
29-ந் தேதி காலை ராமேசுவரத்தில் இருந்து யாத்திரைைய தொடங்கி தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களை சந்திக்கிறார். அன்று மாலை 4 மணியிலிருந்து ராமநாதபுரம் நகருக்குள் யாத்திரையாக சென்று பொதுமக்களை சந்திக்கின்றார். இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.
மீண்டும் 30-ந் தேதி காலை ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் யாத்திரை மேற்கொள்கிறார். அன்று இரவு பரமக்குடியில் தங்குகிறார். 31-ந் தேதி பரமக்குடியில் இருந்து புறப்பட்டு திருவாடானை சட்டமன்ற தொகுதியில் யாத்திரைமேற்கொண்டு அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.