வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், காரல் மார்க்ஸும் சொன்னதுதான் அறம்; மனிதனை நேசிக்கக் கூடியதுதான் அறம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.;

Update:2025-12-27 10:37 IST

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நேற்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நாடக விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு கலை நிகழ்ச்சியினை கண்டுகளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

அறம் என்று சொல்லும்போது, நாம் தப்பாக வேற எந்த அறத்தையும் நினைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், இந்த காலத்திலும் அறம் அறம் என்று சொல்லி நம்மை நிறைய மண்டையை கழுவிக் கொண்டே இருந்தாங்க. அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, அறம் என்று சொல்லுவது மனிதநேயம்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், காரல் மார்க்ஸும் சொன்னதுதான் ‘அறம்’. மனிதனை நேசிக்கக் கூடியதுதான் அறம். ஒரு பெண்ணுக்கு அழகான வசனமாக, இந்த நாடகத்தின் இறுதிக் கட்டத்தில் மணிமேகலை சொல்வது போல; “என்னுடைய வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய உரிமை எனக்கு இல்லை” என்று நீ எப்படி சொல்ல முடியும்?. இன்றைக்கு அந்த உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிறது என்று நாம் புரிந்து கொண்டோம் என்றால் நிச்சயமாக இந்த சமூகத்தில் ஆணவக் கொலைகள் என்பது இருக்கவே இருக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்