வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: விருதுநகரில் சோகம்
சிறுமிகள் கேட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது கேட் சரிந்து விழுந்தது.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தை சேர்ந்த பெண் காவலர் ராஜேஸ்வரி. இவரது மகள் கமலிகா (வயது9). ராஜேஸ்வரியின் சகோதரி மகளான ரிஷிகாவும் (வயது 4), கமலிகாவும் வீட்டின் முன்புறம் உள்ள கேட்டில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கேட் சரிந்து, சிறுமிகள் இருவரின் மீது விழுந்தது. கேட் விழுந்ததில், சிறுமிகள் இருவரும் அதில் சிக்கிக்கொண்டனர்.
கனமான கேட் என்பதால், சிறுமிகளால் மீண்டு வெளியே வர முடியவில்லை. கேட் விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாததால், சிறுமிகள் உடனடியாக மீட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இரு பிஞ்சி உயிர்களை பறிகொடுத்த உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.