ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல்

செதுவாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.;

Update:2022-07-15 22:30 IST

செதுவாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செதுவாலை ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 21 அடி நீளத்திற்கு ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அந்தத் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் நின்று போனது. இது சம்பந்தமாக ஊராட்சி மன்றத்தின் சார்பாக அவருக்கு இரண்டு முறை ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

அப்போது அவர்கள் கழிவு கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக கட்டிடங்கள் கட்டி வந்தவது குறித்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் கழிவு நீர்கால்வாய் கட்டுவதற்கு தோண்டிய பள்ளத்தில் மழைநீரும் கழிவுநீரும் தேங்கி துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கெட்டை ஏற்படுத்தி வந்தது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாய் கட்டும் பணிக்கு வழி வகுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதனை அடுத்து அதிகாரிகள், சம்பந்தப்பட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்கு அவர் உடன்படாத தால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. சாலை மறியலால் சுமார் 2 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்