என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-08-03 07:24 GMT

வண்டலூர்,

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி கும்பல்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் இருந்து அருங்கால் செல்லும் வனப்பகுதி சாலையில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்தபோது அந்த கார் வேகமாக சென்று சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது மோதி நின்றது.

அந்த காரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதனை கத்தியால் வெட்டினர். இதில் அவரது இடது கையில் வெட்டு விழுந்தது. சுதாரித்துகொண்ட கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் 4 பேரை சுட்டனர். அப்போது 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

2 பேரை போலீசார் சுட்டதில் சம்பவ இடத்திலேயே இருவரும் மயங்கி கீழே விழுந்தனர். உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மண்ணிவாக்கம் சுவாமி விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்த ரவுடி வினோத் என்ற சோட்டா வினோத் (வயது 39) என்பதும், அவர் மீது 10 கொலை வழக்குகள் உட்பட 50 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மற்றொரு நபர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் (32) என்பதும், இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.

தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. செல்வகுமார், என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று நடந்த சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் விசாரித்தார். என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இருவரின் உடல்கள் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. முன்னிலையில் அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். 2 ரவுடிகளின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்