கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு; ஒருவருக்கு கத்திக்குத்து - ஈரோட்டில் பரபரப்பு
கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கல்லூரி மாணவர் கவுதமை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான கவுதம் மற்றும் தயாளன் ஆகிய இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தயாளன் தனது இருசக்கர வாகனத்தில் கவுதமை அழைத்துக் கொண்டு பர்கூர் மலைப்பாதையில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கவுதம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தயாளனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த தாக்குதலில் தயாளனின் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் சிலர் தயாளனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தப்பியோடிய கவுதமை போலீசார் கைது செய்தனர். கவுதம் மற்றும் தயாளன் ஆகிய இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு கத்திகுத்து வரை சென்றிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.