முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் 420 இடங்களில் முன்களப்பணியாளர்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.;

Update:2022-08-05 22:31 IST

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் முன்களப்பணியாளர்களான அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், போலீசார் ஆகியோர் கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

420 இடங்களில்...

தற்போது கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடத்தவும், முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கூடுதலாக ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்திக்கொள்ள ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான பணியை துரித்தப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 420 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் அந்தந்த பகுதியில் உள்ள முன்களப்பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், நூறுநாள் வேலை செய்யும் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இம்முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்