மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2023-09-23 19:59 GMT

மூளைச்சாவு

கரூர் மாவட்டம், மைலம்பட்டி, கோட்டை கரியாப்பட்டியை சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலை விபத்தில் சிக்கி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், நேற்று முன்தினம் அந்த நபர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உறவினர்கள், அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதில் அவருடைய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

சிறுநீரக அறுவை சிகிச்சை

மேலும் டிரேன்ஸ்டென் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 35 வயது வாலிபருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

இதில் அரசு மருத்துவமனை டீன் நேரு தலைமையில், மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் மேற்பார்வையில், மருத்துவ நிலைய அலுவலர் ராஜ்மோகன் வழிகாட்டுதலின்படி சிறுநீரக டாக்டர்கள் குழுவினர் மூலம் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் பொருத்தப்பட்டு, அவர் நலமுடன் உள்ளார். இது திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெறும் 19-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.

உடலுக்கு மரியாதை

மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், இரண்டு கண் விழிகளும் 2 பேருக்கும் தானமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் அவர்கள் 5 பேரும் மறுவாழ்வு பெற்றுள்ளனர். அந்த உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டன.

மேலும் இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட, மூளைச்சாவு அடைந்தவரின் உடலுக்கு மருத்துவமனையின் டீன் நேரு மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்