38 பவுன் நகைகளை திருடிய மணப்பெண்ணின் தோழி கைது

38 பவுன் நகைகளை திருடிய மணப்பெண்ணின் தோழி கைது

Update: 2022-09-23 18:45 GMT

முத்துப்பேட்டையில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகைகளை திருடிய மணப்பெண்ணின் தோழியை போலீசார் கைது செய்தனர்.

38 பவுன் நகைகள் மாயம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப்(வயது 53). இவரது மகளுக்கு கடந்த 18-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் மணப்பெண்ணின் தோழிகள் உள்பட உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்து அன்று இரவு வீட்டின் பீரோவில் இருந்த மணப்பெண்ணின் கழுத்து மாலை, சங்கிலி, ஆரம், வளையல், மோதிரம் உள்பட 38 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.

தனிப்படை

இதையடுத்து மாயமான நகைகளை மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீடு முழுவதும் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் முகமது ஆரிப் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து நகையை திருடியவரை தேடிவந்தனர்.

மணப்பெண்ணின் தோழி

இந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டி மணலியை சேர்ந்த பாலு மகள் வினிதா(25) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகைகளை தான் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

எம்.சி.ஏ. பட்டதாரியான வினிதா, மணப்பெண்ணுடன் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்துள்ளார். பின்னர் வினிதா படிப்பு முடிந்து சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஒன்றும் தெரியாததுபோல்...

தோழிக்கு திருமண நிச்சயதார்த்தம் அழைப்பு வந்ததும் கடந்த 18-ந்தேதி சென்னையில் இருந்து முத்துப்பேட்டைக்கு வந்துள்ளார். பின்னர் மணப்பெண்ணின் அறையில் தங்கியுள்ளார். அப்போது மணப்பெண் நகைகளை கழற்றி வைத்ததை நோட்டமிட்டு வந்துள்ளார்.

பின்னர் தோழி மற்றும் உறவினர்களின் கவனத்தை திசை திருப்பி, மணப்பெண்ணின் நகைகளை திருடி வைத்துகொண்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார்.

கைது

பின்னர் அன்று இரவு ஊருக்கு செல்வதாக கூறி சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சென்னைக்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு நகை கடையில் தான் திருடிய பாதி நகையை விற்றுவிட்டு புதிதாக வேறு நகை வாங்கியுள்ளார். மேலும் மன்னார்குடிக்கும், திருத்துறைப்பூண்டிக்கும் வந்து மற்ற நகைகளையும் விற்பனை செய்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசார் தீவிர விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், வினிதாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வினிதா நகைகளை விற்ற பகுதிகளுக்கு சென்று அந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டு மணப்பெண்ணின் நகைகளை தோழியே திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்