வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம், 5 பவுன் நகை திருட்டு

ஆரல்வாய்மொழி அருகே வியாபாரி வீட்டில் கதவின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-22 18:45 GMT

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே வியாபாரி வீட்டில் கதவின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

வியாபாரி

ஆரல்வாய்மொழி அருகே உள்ள சோழபுரம் கைகாட்டி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (வயது68), வியாபாரி. இவர் மாதவலாயத்தில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சீனத் பீவி (64). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

2 மகள்களுக்கும் திருமணமாகி மாதவலாயத்தில் வசித்து வருகின்றனர். மகன் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் உள்ளார். இதனால் வீட்டில் ரஹ்மத்துல்லாவும், மனைவியும் வசித்து வருகின்றனர்.

மகள் வீட்டுக்கு சென்றனர்

இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டை விட்டு அருகில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று காலை 8 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்க கிரில் கதவு மற்றும் முன்பக்க கதவு ஆகியவற்றில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பதறியடித்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது 2 படுக்கை அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த துணிமணி, பொருட்கள் சிதறி கிடந்தன.

நகை, பணம் திருட்டு

ஒரு பீரோவில் இருந்த ரூ.2½ லட்சமும், மற்றொரு பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம், தங்க கம்மல், மோதிரம் என 5 பவுன் நகைகளும் திருடப்பட்டிருந்தது. இந்த பணம் ரஹ்மத்துல்லா தனது மகளுக்கு கொடுப்பதற்காக ஒரு வங்கியில் இருந்து எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவின்குமார் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது ெதரிய வந்தது.

மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து அருகில் உள்ள சாலை வரை ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தனிப்படை

இந்த திருட்டு தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கோமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிவருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்