பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்த விவகாரம்: சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினருடன் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2023-05-31 23:59 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக்கூடாது, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்வதாக கூறி போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதற்கிடையே கடந்த 29-ந்தேதி சென்னையில் பஸ் தொழிலாளர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகரமே ஸ்தம்பித்தது. ஒரு மணி நேர வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததால் நிலைமை சீரடைந்தது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கிய சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.

இதற்கு தொழிலாளர் நல கூடுதல் கமிஷனர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமேலாளர் (இயக்கம் மற்றும் கூட்டாண்மை) செல்வம் மற்றும் சி.ஐ.டி.யூ. சார்பில் மாநில தலைவர் சவுந்தரராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.) பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க (சி.ஐ.டி.யூ.) பொதுச்செயலாளர் தயானந்தம் மற்றும் கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

வேலைநிறுத்த நோட்டீஸ்

பேச்சுவார்த்தை தொடர்பாக மாநில தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

'மாநகர போக்குவரத்து கழகத்தில் தினசரி 900 பஸ்கள் ஊழியர்கள் இன்றி ஓடாமல் நிற்கிறது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க கூடாது, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்திதான் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை நிர்வாகம் ஆட்களை எடுப்பதற்கும், காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்க முயற்சி செய்தனர். இதனை கண்டித்து ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தொழிலாளர் நல அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

மீண்டும் 9-ந்தேதி பேச்சுவார்த்தை

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 700 பஸ்கள் ஓடவில்லை என்றும் தெரிவித்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்டுவிட்டு, வருகிற 9-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எங்களை பொறுத்தவரையில் டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை நிரந்தர பணியில் நியமிக்கும் வகையில் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வரும் பேச்சுவார்த்தையில் பிற சங்கங்களையும் அழைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்