நிலத்தகராறில் விவசாயியை மிரட்டியதாக பா.ம.க. நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு

Update: 2023-07-23 19:00 GMT

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வேப்பிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 55). விவசாயி. இவர் மங்களபுரம் பகுதியை சேர்ந்த ரங்கராஜன் (56) என்பவரிடம் கடந்த 2008-ம் ஆண்டு நிலம் ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. இதை பத்திரத்தில் ரங்கராஜன் எழுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளவில்லையாம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் மீதி பணத்தை கொடுப்பதாக கூறி மாதையன் நிலத்தை கேட்டுள்ளார். ஆனால் ரங்கராஜன் பணம் மற்றும் நிலத்தை எழுதி தரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ரங்கராஜனுக்கு ஆதரவாக தற்போது பா.ம.க. மாநில இளைஞர் அணி செயலாளராகவும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் இருந்து வரும் வடிவேலன் (46) பேச்சுவார்த்தை நடத்தினாராம். அப்போது வடிவேலன் நிலம் சம்பந்தமாக மாதையனை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து மாதையன் சென்னை ஐகோர்ட்டில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

அதன்பேரில் மாதையன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி மங்களபுரம் போலீசார் பா.ம.க. நிர்வாகி வடிவேலன், ரங்கராஜன் மற்றும் அவரது மகன் ராம்குமார் (36), ரங்கராஜனின் சித்தப்பா ராமலிங்கம் (66) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்