தூய்மை பணியாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கு; ஜனநாயகத்திற்கு எதிரானது - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து

தூய்மை பணியை குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுக்கும்படி உத்தரவிடுவது ஜனநாயகத்திற்கு எதிராக அமைந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Update: 2024-04-16 11:20 GMT

மதுரை,

மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் சுமார் ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் நிரந்தரமாக பணியமர்த்தப்படவில்லை. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.

அதோடு மாநகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணி ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. தூய்மை பணியும் ஒப்பந்த அடிப்படையில் விடப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே மதுரை மாநகராட்சியில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். தூய்மை பணியாற்றி வரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் கொண்டு சுய உதவிக்குழுக்களை உருவாக்கி தூய்மை பணி ஒப்பந்தங்களையும், கழிப்பிட பராமரிப்பு ஒப்பந்தங்களையும் அவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார், நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "தூய்மை பணியை குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுக்கும்படி எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்திற்கு எதிராக அமைந்துவிடும்" என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் கோரிக்கையை திருத்தம் செய்து மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்