தமிழகம் முழுவதும் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகம் முழுவதும் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-16 00:11 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மழை பரவலாக கொட்டி தீர்த்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தலைநகர் சென்னையில் அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்ட முன்ஏற்பாடுகளால் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

சீர்காழியில் கனமழை

அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடந்த வாரம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிக அளவாக 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை வெளுத்து வாங்கியது. குடியிருப்புகள் வெள்ளக்காடாக மாறியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

பல ஏக்கர் விளைநிலங்களும் நீரில் மூழ்கின. இதற்கிடையே கடந்த சில தினங்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. சென்னையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பார்க்கும்போது, தமிழகத்தில் இந்த பருவமழை காலத்தில் இது 3-வது மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் பட்சத்தில் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் சென்னை உள்பட தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான சூழல் இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், நாலுமுக்கு 12 செ.மீ., மாமல்லபுரம், காக்காச்சி தலா 9 செ.மீ., கீழ் கோதையாறு, குலசேகரப்பட்டினம் தலா 7 செ.மீ., திருக்கழு குன்றம், பெரம்பூர் தலா 6 செ.மீ., அயனாவரம், திண்டி வனம், மயிலாடி, கொட்டாரம் தலா 5 செ.மீ., வந்தவாசி, டி.ஜி.பி. அலுவலகம், வைப்பார், வடபுதுப்பட்டு, நாகர்கோவில், ஆம்பூர், பாபநாசம், பூந்தமல்லி, கொடைக்கானல், சென்னை விமான நிலையம், பீளமேடு, ஏ.சி.எஸ். கல்லூரி தலா 4 செ.மீ. உள்பட சில இடங் களில் மழை பெய்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்