நீர்வழித்தடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்

உடுமலை பகுதியில் நீர்வழித்தடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-21 18:20 GMT

உடுமலை பகுதியில் நீர்வழித்தடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீராதாரங்கள்

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சாகுபடி பணிகளுக்கு கிணறு, ஆழ்குழாய் கிணறு, நீர்வழித்தடங்களை ஆதாரமாகக் கொண்ட குளம், குட்டைகள், அணைகள் உதவி புரிந்து வருகிறது. நீராதாரங்கள் பருவமழை மற்றும் புயல் தீவிரம் அடையும்போது நீர்வரத்தை பெற்று வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஓரளவுக்கு கை கொடுத்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை இயல்பை விடவும் நல்ல முறையில் நீர்வரத்தை அளித்து உதவியது. இதனால் நீராதாரங்கள் நீர்வரத்தை பெற்று நிலத்தடிநீர் இருப்பை உயர்த்தி வந்தது.

இந்த சூழலில் ஊருக்கு அருகில் மற்றும் குளத்தின் கரைகளுக்கு அருகில் நீர் இருப்பை தேக்கி வைக்கும் வகையில் ஆங்காங்கே தொட்டிகள் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் நிலத்தடிநீர் இருப்பு கூடுதலாக உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தடுப்பணைகள்

நிலத்தடி நீர் இருப்பை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஒரு சில பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களைக்கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நீர்வழித்தடங்களில் ஆங்காங்கே குறிப்பிட்ட இடைவெளியில் சிறுசிறு தொட்டிகள் போன்று அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படும் போது அதில் தேங்கக் கூடிய சூழல் உருவாகி உள்ளது.

ஆனால் அந்த தொட்டிகளை இன்னும் அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். இதனால் மழைக் காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை அதிக அளவில் தேக்குவதற்கு இயலும். அதுமட்டுமின்றி ஓரளவிற்கு பெரிய பரப்பளவை கொண்ட நீர்வழித்தடங்களில் தடுப்பணைகள் அமைப்பதற்கும் முன்வர வேண்டும்.

இதனால் வான் கொடுக்கும் விலைமதிப்பற்ற தண்ணீரை சேமித்து வைத்து தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி சாகுபடி பணிகளும் தங்குதடை இன்றி நடைபெறும்.

ஆய்வு செய்ய வேண்டும்

இதனால் உணவு தானிய உற்பத்தி பெருவதுடன் கூலித் தொழிலாளர்களும் நிரந்தர வேலை வாய்ப்பை பெறுவார்கள். அத்துடன் ஒரு சில பகுதிகளில் பெயரளவுக்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அந்த பணிகள் நடைபெறுவதற்கான நோக்கமும் வீணாகி வருகிறது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீர் வழித்தடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை முறையாக ஆய்வு செய்ய முன் வரவேண்டும்,

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்