வடலூரில், குழந்தையை விற்ற வழக்கு: பெண் சித்த மருத்துவர் உள்பட 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

வடலூரில், குழந்தையை விற்ற வழக்கில் பெண் சித்த மருத்துவர் உள்பட 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.;

Update:2023-03-23 00:15 IST

வடலூர் அருகே கோட்டக்கரை பகுதியில் வசித்து வரும் சித்த மருத்துவர் மெகருன்னிசா (67). இவர் வடலூரை சேர்ந்த அருள்முருகன் மனவைி சுடர்விழி என்பவரிடம் ரூ.3½ லட்சத்துக்கு ஒரு ஆண்குழந்தையை விற்பனை செய்தார்.

இந்த குழந்தையை மெகருன்னிஷா வடலூரை சேர்ந்த ஆனந்த் என்பவர் மூலம் கீரப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இருந்து வாங்கியதும், அதற்கு கீரப்பாளையத்தை சேர்ந்த கஜேந்திரன் மனைவி ஷீலா (37), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்த செல்லக்குட்டி மகன் ஆனந்தன் (47), நந்தினி ஆகியோர் உடந்தை யாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மெகருன்னிசா ஏற்கனவே குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்பு உடையவர் என்றும் தெரிந்தது.

குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடர்விழி, சித்த மருத்துவர் மெகருன்னிசா, ஷீலா, வடலூர் ஆனந்தன், சீர்காழி ஆனந்தன், நந்தினி ஆகிய 6 பேரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா ஆகியோர் மேல் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மெகருன்னிஷா, ஷீலா ஆகியோரின் குற்றச் செயலை கட்டுப் படுத்தும் வகையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கடலுார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, இன்ஸ்பெக்டர் வினதா ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்