மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிக்கப்படுவதை கண்டித்தும், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து கிறிஸ்தவ ஊழியர் ஐக்கியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட அனைத்து கிறிஸ்தவ ஊழியர் ஐக்கிய தலைவர் பால் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆமோஸ் வரவேற்று பேசினார். இதில் அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் ஜோசுவா ஸ்டீபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.