பழுதடைந்த மின்சாதன பொருட்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல்

திண்டிவனம் அருகே மின்கம்பிகள் மீது டிப்பர் லாரி உரசியதால் ஏற்பட்ட உயர் மின் அழுத்ததால் பழுதடைந்த மின்சாதன பொருட்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-11-27 18:45 GMT

திண்டிவனம்

உயர் மின் அழுத்தம்

திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசத்தை அடுத்த அரியந்தாங்கல் கிராமத்தில் டிப்பர் லாரி ஒன்று எம்.சாண்ட் ஏற்றுவதற்காக சென்று கெண்டிருந்தபோது சாலையோர உயரழுத்த மின் கம்பிகள் மீது உரசியது. இதனால் அந்த பகுதியில் பங்கர சத்தத்துடன் தீப்பொறிகள் கிளம்பியதோடு அங்கு உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது.

இதன்காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி., கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின், ஏ.சி., மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் பழுதடைந்த மின்சாதன பொருட்களை எடுத்து வந்து சாலையின் குறுக்கே வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மின்சார உயர் அழுத்தம் காரணமாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மின்சார ஊழியர்கள் சேதம் அடைந்த மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

6 பேர் மீது வழக்கு

இதற்கிடையே சாலைமறியலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சதீஷ்பாபு, ராமு, தண்டபாணி, சுப்ராயன், கந்தவேல், பிச்சை ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்