கொடியேற்றும் நிகழ்ச்சியில் கைகலப்பு; 2 ஊர்களில் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு லாலாபேட்டையில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கைகலப்பு மற்றும் இரு தரப்பினரும் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக லாலாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு லாலாபேட்டையில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கைகலப்பு மற்றும் இரு தரப்பினரும் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக லாலாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொயேற்றும் நிகழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாபேட்டையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், வாலாஜா மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான அக்ராவரம் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது லாலாப்பேட்டையை சேர்ந்த சிலர் கொடியேற்றுதல் நிகழ்ச்சியின்போது பிரச்சினை செய்துள்ளனர். இது திடீரென்று கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்ளிட்ட சிலருக்கும், லாலாபேட்டையை சேர்ந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
சாலை மறியல்
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி லாலாப்பேட்டையிலும், அக்ராவரத்திலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலை கலைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் சிப்காட் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர்.
35 பேர் கைது
அதன்பேரில் லாலாப்பேட்டையை சேர்ந்த சம்பத் (வயது 65), சண்முகம் (48), லாலாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோகுலன் (41), கோபால் (60), மோகன் (45), செங்கல்வராயன் (71), பழனி (56), தீபன்குமார் (29), ஜெனகன் (22), முகமதுகரீம் (33), பாலமுருகன் (27), பூபாலன் (39), அன்பு (33), மனோகரன் (44), சதீஷ்குமார் (33), லட்சுமணன் (33), தியாகு (27), முருகன் (53) ஆகிய 18 பேரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் அக்ராவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (34), ராம்ஜி (34), தனசேகரன் (31), சிலம்பரசன் (28), தயாளன் (52), ஏழுமலை (54), ரத்தினவேல் (40), சத்தியமூர்த்தி (35), தினேஷ்குமார் (32), அய்யப்பன் (21), வாணாபாடி பகுதியை சேர்ந்த சங்கர் (39), எடப்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் (32), பிரபாகரன் (30), நெல்லிக்குப்பத்தை சேர்ந்த விஜயகுமார் (24), மகேந்திரன் (32), மேல்புதுப்பேட்டை சேர்ந்த பாண்டியன் (36), அருள் பாண்டியன் (31) ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.
காஞ்சனகிரி கோவில் நிர்வாகம் செய்வதிலும், லாலாப்பேட்டை ஊராட்சி மறுவரையறை செய்வதிலும் இருதரப்பினருக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சினை நிலவி வருவதால் இச்சம்பவங்கள் நடைபெற்றது என கூறப்படுகிறது.