நாடெங்கிலும் அதிகரிக்கும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் - திருமாவளவன் கண்டனம்

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலைக் கண்டித்து வரும் 5- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-01 10:55 IST

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

டிசம்பர் 25, 2025 -கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது சங்கப் பரிவாரத்தினர் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் மத சுதந்திரத்துக்கு எதிராக நடத்தப்படும் இத்தகையத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசை பாஜக கைப்பற்றிய 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் மீது பல்வேறு விதமான வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். கிறிஸ்தவ மக்கள் குறி வைத்துத் தாக்கப்படுவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் கிறிஸ்தவர்களின் மீது 834 தாக்குதல்கள் சங்கப் பரிவாரத்தினரால் நடத்தப்பட்டுள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டில் இந்த தாக்குதல்களின் எண்ணிக்கை வெறும் 139 ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தேவாலயங்களை எரித்தல்; மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற பொய்யான புகார்களைச் சொல்லி கைது செய்தல்;, கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்குச் சொந்தமான பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துதல்; கிறிஸ்தவ மத குருமார்கள், கன்னியாஸ்திரிகள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்துதல் - என இந்தத் தாக்குதல்கள் பலவகைப் பட்டவையாக உள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தினர் மற்றவர்களை மதமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்கள் மீது பொய் வழக்குகளை தொடுப்பதும் அதிகரித்து வருகிறது.

கிறிஸ்தவத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நன்கொடை பெறுவதற்கான அனுமதியை ரத்து செய்வது, அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை முதலானவற்றை ஏவுவது ஆகியவையும் அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கிறிஸ்தவர்கள் 80 க்கும் அதிகமான இடங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். தேவாலயங்கள் தாக்கப்பட்டது மட்டுமின்றி கிறிஸ்துமஸ் தொடர்பானப் பொருட்களை விற்ற வணிகர்கள், பாதையோர வியாபாரிகள் உள்ளிட்டவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினருக்கு எதிராகக் கட்டமைப்பு ரீதியான தாக்குதல் பாஜக ஆட்சியில் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியைக் குறைப்பது; சிறுபான்மை மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கான படிப்பு உதவி தொகைக்கான நிதியைக் குறைப்பது; அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை அழிப்பது என பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

வழிபாட்டுச் சுதந்திரத்தை மறுப்பது; வழிபாட்டிடங்கள் பாதுகாப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது முதலான நடவடிக்கைகளின் மூலமாக மதச்சிறுபான்மையினருக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்புகளை ஒவ்வொன்றாக பாஜக அரசு அழித்து வருகிறது. அவர்களை கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற விடாமல் தடுத்து முடக்குகிற வேலையைச் செய்து வருகிறது. அதன் உச்சகட்டமாகவே இன்று நேரடியான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதை சனநாயக சக்திகள் வேடிக்கைப் பார்க்க முடியாது.

மோடி அரசாங்கத்தின் கீழ் கிறிஸ்தவ மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும், இத்தகைய மத வெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டியதும் இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும். இதை வெளிப்படுத்தும் விதமாக எதிர்வரும் 5 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதில் மதச்சார்பற்ற சக்திகள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்