தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படுமா? - ப.சிதம்பரம் பதில்
தொகுதி பங்கீடு குறித்து திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று ப.சிதம்பரம் கூறினார்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். 5 பேரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைமை நியமித்து இருக்கிறது. இந்த 5 பேரும் முதல்-அமைச்சரையும், மற்ற தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக தேர்தலை சந்திக்கும். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி வெல்லும் என்பது என் முழு நம்பிக்கை.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆனாலும் அவர் முயற்சி வெல்லாது. யாருக்கும், யார் போட்டி என்பது தொகுதியை பொறுத்துதான் தெரியும். தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவெடுப்பார்கள். மற்றவர்கள் கருத்து சொல்லலாம். ஆனால் முடிவு தலைவர்கள் 2 பேருக்கு இடையேதான்.
100 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தற்போது அறிவித்த புதிய வேலை திட்டத்தின் பெயரை யாராலும் உச்சரிக்கக்கூட முடியாது. ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி ஏற்படுமா? என்பதெல்லாம் 2 கட்சித்தலைவர்களும் முடிவெடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.