அமைச்சர் இ.பெரியசாமி வீடு முன்பு திரண்ட தூய்மை பணியாளர்கள்

திண்டுக்கல்லில் பட்டா வழங்கக்கோரி அமைச்சர் இ.பெரியசாமி வீடு முன்பு தூய்மை பணியாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-23 19:42 GMT

திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் திண்டுக்கல் நெட்டுத்தெரு பகுதியில் 45 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அதன் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தூய்மை பணியாளர்கள் சிலர் வீடு கட்டி குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தூய்மை பணியாளர்கள் திண்டுக்கல்லில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி வீடு முன்பு திரண்டனர். இதையடுத்து அமைச்சரின் உதவியாளர்கள் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாநகராட்சி சார்பில் தங்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்ததால் அவற்றை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. வீடுகளை இடிக்கக்கூடாது. மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நாங்களே வீடு கட்டிக்கொள்ள பட்டா வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக வந்துள்ளோம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். பின்னர் போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்