தென்னை மரங்களில் கொத்து கொத்தாக தேங்கி கிடக்கும் தேங்காய்கள்

தொடர் மழையால் பறிப்பு பணிக்கு தொழிலாளர்கள் வராததால், தென்னை மரங்களில் கொத்து கொத்தாக தேங்காய்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.;

Update:2022-07-18 20:20 IST

சுல்தான்பேட்டை

தொடர் மழையால் பறிப்பு பணிக்கு தொழிலாளர்கள் வராததால், தென்னை மரங்களில் கொத்து கொத்தாக தேங்காய்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தென்னை மரங்கள்

பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கிணத்துக்கடவு, சூலூர் வட்டாரத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு ஒரு கோடிக்கும் மேல் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்கள் மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, சென்னை உள்பட பல இடங்களுக்கு விற்னைக்கு அனுப்பபடுகிறது. மீதமுள்ள தேங்காய்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட களங்களில் கொப்பரைகளாக மாற்றம் செய்யப்படுகிறது.

தேங்காய் பறிக்கும் பணிக்கு அந்தந்த பகுதி உள்ளூர் தொழிலாளர்கள் தவிர உடுமலை, பூளவாடி, பெதப்பம்பட்டி, கெடிமேடு, கோமங்கலம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்களும் விவசாயிகளால் வரவழைக்கப்படுகின்றனர்.

தொடர் மழையால் அச்சம்

இந்தநிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மரங்களில் ஏறி தேங்காய் அல்லது இளநீர் பறிக்கும்போது கீழே தவறி விழுந்து விடுவோமோ? என்று பெரும்பாலான தொழிலாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

இதனால் அவர்கள் தேங்காய் பறிப்பு வேலைக்கு வருவதில்லை. உயரம் குறைந்த தென்னை மரங்களில் கீழே நின்று பெரிய கம்புகளில் கூர்மையான கத்தியை பொருத்தி தேங்காய்களை விவசாயிகள் பறித்து விடுகின்றனர். ஆனால் உயரம் அதிகமான மரங்களில் அது சாத்தியப்படுவது இல்லை.

பணியில் தொய்வு

இதனால் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை உள்பட பல இடங்களில் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கப்படாமல் அப்படியே கொத்து, கொத்தாக தேக்கம் அடைந்து உள்ளது. உரிய நேரத்தில் தேங்காய்களை பறித்து விற்பனை செய்வோ அல்லது கொப்பரையாக மாற்றவோ முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். தற்போது பெரும்பாலான இடங்களில் ஆயிரம் தேங்காய் பறிப்புக்கு கூலியாக ரூ.1,000, பறிப்பிக்குபின் ஒரு இடத்தில் குவித்து வைக்க காய் ஒன்றுக்கு கூலியாக 30 பைசா வழங்கப்படுகிறது. ஏற்கனவே தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், தற்போது மழையின் காரணமாக பறிப்பு பணி தொய்வடைந்து உள்ளதால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்