கடலூரில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
கடலூரில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.;
உலக சிறுநீரக தினத்தையொட்டி கடலூர் அரசு தலைமை மருத்துவமனை சிறுநீரகவியல் துறை சார்பில் கடலூரில் நேற்று காலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடலூர் டவுன் ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது பாரதி சாலை வழியாக கடலூர் அரசு மருத்துவமனையை சென்றடைந்தது. பேரணியில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டு சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தபடி சென்றனர்.
இதில் தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல், சிறுநீரகவியல் துறை மருத்துவர் திருமுருகன், பாலகுமாரன், டாக்டர் அசோக் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.