உரிய காரணம் இல்லாமல்மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாதுவங்கிகளுக்கு, கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தல்

உரிய காரணமின்றி மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்கக்கூடாது என்று சேலத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.;

Update:2023-09-29 01:46 IST

சேலம்

உரிய காரணமின்றி மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்கக்கூடாது என்று சேலத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

சேலம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் கல்விக்கடன் தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-

கல்வியின் முக்கித்துவத்தை கருத்தில் கொண்டு அனைவருக்கும் உயர் கல்வி கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்த ஒரு மாணவனுக்கும் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே கல்விக்கடன்கள் வழங்கப்படுகிறது. வங்கிகள் கல்விக்கடன் விண்ணப்பங்களின் மீது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கடன் வழங்க வேண்டும். உரிய காரணமின்றி மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்கக்கூடாது.

கல்வி கடன் மேளா

மாவட்ட நிர்வாகம் மூலம் வருகிற 15-ந் தேதி சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் மேளா நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களும் கல்விக்கடன் பெற விருப்பமுள்ள அனைத்து மாணவர்களையும் அதிக அளவில் கல்வி கடன் மேளாவில் பங்கேற்க செய்ய அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை முதுநிலை கடன் ஆலோசகர் வணங்காமுடி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜ்குமார், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சிவகுமார், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் துர்கா லட்சுமி மற்றும் வங்கி கிளைகளின் மேலாளர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்