வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் பெறலாம்

வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.;

Update:2022-08-03 22:49 IST

வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியில் உள்ள நறுமணப்பூங்காவில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் தொடா்பான கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இந்திய ஏற்றுமதி இறக்குமதி இணை இயக்குனர் செல்வநாயகி முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:- மாவட்டத்திலுள்ள நறுமண பூங்காவினை அதிக தொழில் நிறுவனங்களுடன் இயக்க வேண்டும் என்பதற்காகவும், ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து 5 நாட்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. நறுமணப்பூங்காவில் மிளகாயினை மதிப்பூட்டப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை வேளாண் சார்ந்த மாவட்டமாக உள்ளதால் இங்கு கிடைக்கும் விளைப்பொருட்களை மதிப்பூட்டப்பட்ட பொருளாக மாற்றி வியாபாரம் செய்யும் பட்சத்தில் லாபம் கூடுதலாக கிடைக்கும்.

வெளிநாடு ஏற்றுமதி

சிங்கம்புணரி மற்றும் திருப்புவனம் போன்ற பகுதிகளில் தென்னை மற்றும் எண்ணெய் வகைகளுக்கான வாய்ப்புக்கள் உள்ளன. தற்போது சிறுதொழில்கள் மூலம் அங்கு வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏராளமாக உள்ளன. தொழில் முனைவோர்கள் தங்களுக்கான தொழிலில் முன்அனுபவம் பெற்று, தொழில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஏற்றுமதி பொருட்கள் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும். தரம் குறைந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் அவை தரக்கட்டுப்பாட்டு அலகால் திருப்பி அனுப்பப்படும். இதனால் கூடுதல் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பயிற்சிகள்

காரைக்குடி பகுதியில் சிறுதானியங்கள் உற்பத்தி சார்ந்து மாவுப்பொருட்களான திண்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. வேளாண்மையை சார்ந்த ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவதற்காக வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்

இதில், நறுமணப்பூங்கா இணை இயக்குனர் ராமலிங்கம், துணை இயக்குனர் வேளாண் விற்பனை சுரேஷ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அமைப்பு உதவி இயக்குனர் உமா சந்திரிகா, உதவி இயக்குனர் (அயல்நாட்டு வர்த்தகம்) விஜயலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்