வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

கறம்பக்குடியில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

Update: 2023-10-10 18:54 GMT

தரிசாக கிடக்கும் நிலங்கள்

கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள ராட்டினா குளம், பங்களாக்குளம் கோழிக் குடாப்பு குளம் ஆகியவற்றின் வரத்து வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நல்ல மழை பெய்தாலும் குளங்களுக்கு தண்ணீர் செல்வது இல்லை. ராட்டினா குளம் பாசனத்தில் உள்ள சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டம்

எனவே கறம்பக்குடியில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினர். இதையடுத்து வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதன்படி நேற்று கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் அம்புக்கோவில் சாலையில் உள்ள ராட்டினாகுளம் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

கட்டுமானங்கள், வேலிகள் இடித்து அகற்றப்பட்டன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்