ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார்: வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-26 11:34 GMT

ஓட்டல் ஊழியர்கள் தாக்குதல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 24). இவர் கடந்த 22-ந் தேதி இரவு எளாவூரில் உள்ள தபா ஓட்டலில் உணவருந்த சென்றிருந்தார். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் நரேஷை ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் உடல் வலி அதிகமான காரணமாக ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து அவரை ஸ்ரீசிட்டியில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திடீர் சாலை மறியல்

இந்த நிலையில், தபா ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதால் தான் வாலிபர் நரேஷ் இறந்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அவரது தந்தை சங்கர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். இதனையடுத்து ஆரம்பாக்கம் போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து நரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வாலிபர் உடலை வாங்க மறுத்து நேற்று மாலை ஆரம்பாக்கம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நரேஷின் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி, ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்