திண்டுக்கல் தபால் அலுவலகம் முன்பு பாய்-தலையணையுடன் காங்கிரசார் போராட்டம்

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் தபால் அலுவலகம் முன்பு பாய்-தலையணையுடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-17 15:45 GMT

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் தபால் அலுவலகம் முன்பு பாய்-தலையணையுடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

காங்கிரசார் போராட்டம்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து கோஷமிட்டனர்.

முற்றுகை-தள்ளுமுள்ளு

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு மூத்த நிர்வாகி புதிய பாய், தலையணையுடன் வந்து இருந்தார். பின்னர் திடீரென அவர் சாலையில் பாயை விரித்து, தலையணை போட்டு அதில் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தபால் அலுவலகத்துக்குள் நுழையவும் முயன்றனர். ஆனால் போலீசார் தடுப்புகள் வைத்து தடுத்தனர். இதனால் லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது. எனினும் ஒருசிலர் தபால் அலுவலகத்துக்குள் புகுந்து விட்டனர். இதனால் முற்றுகையில் ஈடுபட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 59 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோபால்பட்டி

இதேபோல் சாணார்பட்டி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோபால்பட்டி பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா தலைமை தாங்கினார். சாணார்பட்டி தெற்கு வட்டார தலைவர் ராஜேந்திரன், வடக்கு வட்டார தலைவர் ராஜ்கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் வயநாடு ஜோசப் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சபியுல்லா, ராமகிருஷ்ணன், தாஸ், சின்னசாமி, ராஜலட்சுமி, பிரபாவதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்