நாகையில், கடலில் இறங்கி காங்கிரசார் போராட்டம்

எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் கடலில் இறங்கி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-03 19:15 GMT

எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் கடலில் இறங்கி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்

தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகை மாவட்ட பகுதிகளிலும் காங்கிரசார், நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்தும், ரெயிலை மறித்தும், தீப்பந்தம் ஏந்தியும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கடலில் இறங்கி போராட்டம்

இந்த நிலையில் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாகை அருகே கல்லாரில் காங்கிரஸ் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் அமிர்தராஜா போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ராகுல்காந்தி மீது பொய் வழக்குப்பதிவு செய்து எம்.பி. பதவியை பறித்ததாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் கடலில் நின்றபடி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் அரை மணிநேரம் நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்