பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சமையல் தொழிலாளி சாவு

பேரணாம்பட்டு அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சமையல் தொழிலாளி சாவு;

Update:2022-08-01 23:22 IST

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்ரோஸ் (வயது 37). இவர் ஆம்பூரிலுள்ள ஷூ கம்பெனியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இன்று பணிக்கு சென்ற அவர் மதியம் ஆம்பூரிலிருந்து எம்.வி.குப்பம் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் அழிஞ்சிக்குப்பம் கிராமம் அருகில் வந்த போது அப்ரோஸ் தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து பஸ்சின் பின்புற படிக்கட்டுக்கு வந்து தனது கிராமத்தில் இறங்குவதற்கு தயாராக நின்றார்.

அப்போது எதிர்பாராவிதமாக பஸ்சின் படிக்கட்டிலிருந்து நிலை தடுமாறி தவறி கீழே விழுந்த அவர் தலையின் பின்புறம் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அப்ரோஸ் இறந்தார்.

இதனிடையே பஸ்சை ஓட்டிவந்த டிரைவர் தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவர் மனோகரனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்