தொகுதிப் பங்கீடு குறித்து வெளியான தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்
தொகுதிப்பங்கீடு குறித்து வெளியான தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.;
சென்னை,
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணையாமல், மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து இணைந்திருப்பது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என்று கூறிவந்த டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றே கடுமையாக விமர்சித்தார்.
அதன்பிறகு, பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அதனால், அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அவர் இணைந்திருக்கிறார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரப்பூர்வமற்றவை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் இதய தெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்திடும் நோக்கத்தில் அக்கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்று இணைந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் என்ற முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
தொகுதிப்பங்கீடு தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரப்பூர்வமற்றது என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்வதோடு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.