உத்தரவாத காலத்துக்குள் பழுது: தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்- ஈரோடு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

உத்தரவாத காலத்துக்குள் பழுதடைந்த தொலைக்காட்சி பெட்டியை பழுது நீக்கி தராத தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஈரோடு நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;

Update:2022-08-03 02:54 IST

ஈரோடு

உத்தரவாத காலத்துக்குள் பழுதடைந்த தொலைக்காட்சி பெட்டியை பழுது நீக்கி தராத தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஈரோடு நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தொலைக்காட்சி பெட்டி பழுது

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.பி.சுப்பிரமணியம். இவருடைய மகன் எஸ்.லோகநாதன் (வயது42). இவர் ஈரோடு வாசுகி வீதியில் இயங்கி வரும் கடையில் இருந்து கடந்த 8-8-2016 அன்று இன்டக்ஸ் 32 அங்குலம் எல்.ஈ.டி. தொலைக்காட்சி பெட்டி ஒன்று வாங்கினார். இதற்காக ரூ.13 ஆயிரத்து 13 செலுத்தினார். இந்த தொலைக்காட்சி பெட்டிக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம் இருப்பதாக சம்பந்தப்பட்ட நிறுனத்தினர் தெரிவித்தனர்.

இந்த தொலைக்காட்சி பெட்டி கடந்த 12-6-2019 அன்று பழுதடைந்தது. எனவே அதை பழுது நீக்கும் வகையில் சம்பந்தப்பட்ட கடையை அணுகினார். இன்டக்ஸ் நிறுவனத்தின் சர்வீஸ் நிலையம் வீரப்பன்சத்திரம் காந்தி வீதியில் இயங்கி வருவதாகவும், அங்கு கொண்டு செல்லும்படியும் கடை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதன்பேரில் லோகநாதன் தொலைக்காட்சி பெட்டியை சர்வீஸ் நிலையத்தில் கொடுத்தபோது, அதற்கு கட்டணமாக ரூ.400 பெற்று உள்ளனர். ஆனால் பழுது நீக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ரூ.10 ஆயிரம் கொடுத்தால்தான் தொலைக்காட்சி பெட்டியை பழுது நீக்க முடியும் என்று சர்வீஸ் நிலைய நிர்வாகிகளும், தொலைக்காட்சி பெட்டியை விற்பனை செய்த நிறுவனத்தினரும் கூறினார்கள்.

இழப்பீடு

தொலைக்காட்சி பெட்டிக்கு தயாரிப்பு நிறுவனம் 3 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கி இருந்தது. அதற்கு முன்னதாகவே தொலைக்காட்சி பெட்டி பழுதடைந்து விட்டது என்பதை சுட்டிக்காட்டியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எஸ்.லோகநாதன், ஈரோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (நுகர்வோர் கோர்ட்டு) வழக்கு தொடர்ந்தார்.

அதில் தொலைக்காட்சி பெட்டியை மாற்றி கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு உரிய தொகையை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த வழக்கை ஈரோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் எஸ்.பூரணி, உறுப்பினர்கள் வி.பி.வேலுசாமி, வரதராஜபெருமாள் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள். அதில் லோகநாதன் வாங்கிய தொலைக்காட்சி பெட்டிக்கான தொகை ரூ.13 ஆயிரத்து 13-க்கு 8-8-2016 முதல் 9 சதவீத வட்டியும் சேர்த்து தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம், விற்பனை செய்த கடை மற்றும் சர்வீஸ் நிலையம் ஆகியவை வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்