பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - முத்தரசன்

பட்டாசு ஆலை பாதுகாப்பு முறைமைகளில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2024-05-10 08:45 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் அருகில் செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 10 பேர் மரணமடைந்தனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கும் பெரும் துயரமாகும். இந்த விபத்தில் மேலும் 13 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரணமடைந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களது மறுவாழ்வுக்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்கிட வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதும் அதில் ஆண், பெண் தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக உயிர்ப்பலி ஆவதும் பெரும் வேதனை அளிக்கிறது. பட்டாசு ஆலைகளிலும், பட்டறைகளிலும் விபத்து தடுப்பு ஏற்பாடுகளை சரியாகப் பின்பற்றாததும், இதன் மீதான கண்காணிப்பு, சரிபார்ப்பு நடவடிக்கை இல்லாததுதான் விபத்துகளுக்கான காரணம் என அரசு அமைத்த உயர்மட்டக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் மீது அரசு அக்கறை காட்டி ஆலை பாதுகாப்பு முறைமைகளில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்