கடலூா் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 3,911 பேர் மீது வழக்கு

கடலூா் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 3,911 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-17 18:45 GMT

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கலும், நேற்று காணும் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் 2500 போலீசார் கடந்த 14-ந் தேதி முதல் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் 84 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாகன சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 15 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 124 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 104 பேர், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 166 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.

3,911 பேர் மீது வழக்கு

இதேபோல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 1,607 பேருக்கும், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 606 பேர் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்ற 23 பேர், மீதும், போலீசாரின் உத்தரவுகளை பின்பற்றாத 81 பேர் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டியது, பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது என மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,911 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்