குடமுருட்டி பாலம் அருகில் சரிந்து விழுந்த சாலை சீரமைப்பு

அய்யம்பேட்டை குடமுருட்டி பாலம் அருகில் சரிந்து விழுந்த சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் நான்கு சக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது.

Update: 2023-06-07 21:45 GMT

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை குடமுருட்டி பாலம் அருகில் சரிந்து விழுந்த சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் நான்கு சக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது.

பழைய பாலம்

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பாலத்தின் அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதிய பாலத்தின் கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை சரிந்து விழுந்தது.இதனால் 2 சக்கர வாகனங்கள் கூட அய்யம்பேட்டைக்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அய்யம்பேட்டை வடபுற கிராமங்களை சேர்ந்தவர்கள் மிகவும் அவதியடைந்தனர். சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி அய்யம்பேட்டைக்கு வந்து சென்றனர்.

சாலை சீரமைப்பு

இந்த சாலையை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பாபநாசம் ஜவஹிருல்லா எம்.எல்.ஏ. இந்த பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்தபடியே தமிழக நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலுவை தொடர்பு கொண்டு பழுதடைந்த சாலை அருகில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து இந்த சாலையை சீரமைக்க வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் சென்றுவரும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. நேற்று மாலை முதல் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் சாலை சீரமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்