சர்வீஸ் சாலையில் ஆபத்தான குழிகள்

கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையில் ஆபத்தான குழிகள் உள்ளன. இவற்றை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;

Update:2022-08-08 22:04 IST

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையில் ஆபத்தான குழிகள் உள்ளன. இவற்றை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சர்வீஸ் சாலை

கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து கிணத்துக்கடவில் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வர தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கோதவாடி பிரிவு அருகே சர்வீஸ் சாலை அமைத்து, அந்த வழியாக கல்லாங்காட்டு புதூர் வந்து, அங்கிருந்து கிணத்துக்கடவு பஸ் நிலையத்துக்கு வாகனங்கள் வர நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது சர்வீஸ் சாலை வழியாக மதுரை, திண்டுக்கல், பழனி, வால்பாறை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிணத்துக்கடவுக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

குடிநீர் குழாயில் உடைப்பு

இந்த நிலையில் கல்லாங்காட்டு புதூர், சாலைபுதூர் பகுதியில் சர்வீஸ் சாலை அமைந்துள்ள பகுதியில் குடிநீர் குழாய் நிலத்துக்கு அடியில் செல்கிறது. இங்கு கல்லாங்காட்டு புதூர் முதல் கிணத்துக்கடவு பஸ் நிலையம் வரை 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சர்வீஸ் சாலை நடுவில் குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. மேலும் குழிகள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த குழிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் வாகனங்களும் பழுதடைந்து விடுகின்றன.

ஆபத்தான குழிகள்

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கல்லாங்காட்டு புதூர் பகுதியில் சர்வீஸ் சாலையில் பெரிய குழி ஏற்பட்டுள்ளதால், அதில் குச்சி நட்டு சிவப்பு நிற பிளாஸ்டிக் சாக்குப்பை தொங்க விடப்பட்டு உள்ளது. இதுபோன்று பல இடங்களில் குழி உள்ளது. தேசியநெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், சர்வீஸ் சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான குழிகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

இதனால் தினமும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உயிர் பலி ஏற்படும் முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சர்வீஸ் சாலையை பார்வையிட்டு உடனடியாக குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்