கடன் பிரச்சினையில் தகராறு: 2 போலீஸ் ஏட்டுகள் பணிஇடைநீக்கம்; ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

கடன் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் 2 போலீஸ் ஏட்டுகளை பணிஇடைநீக்கம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

Update: 2022-12-15 21:30 GMT

கடன் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் 2 போலீஸ் ஏட்டுகளை பணிஇடைநீக்கம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

ரூ.1 லட்சம் கடன்

ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக சுரேஷ் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.1 லட்சம் கடன் பெற்று உள்ளார்.

அவர் கடன் வாங்கியபோது, அவரது நண்பரான பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு கல்யாணசுந்தரம் என்பவர் ஜாமீன் கையெழுத்து போட்டு உள்ளார். ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கல்யாணசுந்தரம் சமீபத்தில் தான் பவானிசாகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சுரேஷ் வாங்கிய கடனை முறையாக செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஏட்டுகள் சுரேஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் குமாரபாளையத்தில் உள்ள நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பணத்தை விரைந்து கொடுக்குமாறு சுரேஷிடம் கல்யாணசுந்தரம் கூறியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சுரேஷின் வாக்கி டாக்கியை பிடுங்கி கல்யாணசுந்தரம் தூக்கி எறிந்து உள்ளார்.

இதுகுறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 2 பேரும் சமாதானமாக செல்வதாக எழுதி கொடுத்து உள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ், கல்யாணசுந்தரம் ஆகிய 2 பேரிடம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்