மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
அ.தி.மு.க. சட்ட விதிகளை மாற்றம் செய்ததை கண்டித்தும், பொது செயலாளர் பதவியை பெற முயற்சிப்பதற்கு எதிராகவும், அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி கேட்டதை எல்லாம் ஓ.பி.எஸ் விட்டு கொடுத்தார். மேலும் முதல்-அமைச்சர் வேட்பாளர், அ.தி.மு.க. பதவி என அனைத்து பதவிகளையும் கேட்டதால் கட்சிக்காக விட்டு கொடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கோடநாடு வழக்கிற்காக ஆட்சியை விட்டு கொடுத்து உள்ளார்.
எனவே உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். தொண்டர்கள் எண்ணத்தின் படி ஓ.பன்னீர்செல்வம் தான் அ.தி.மு.க. என்று நிலை வரும் என்றார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது.