வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர், புவனகிரியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-30 18:45 GMT

கடலூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகரன் (வயது 36) என்பவர் கடந்த 27-ந் தேதி இரவு மணல் கடத்தலை தடுக்க முயன்றார். அப்போது, அவரை ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், ஊராட்சி மன்ற தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

அந்த வகையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மதியம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், துணை தலைவர்கள் ராஜேஷ்பாபு, பூபாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதரன், உறுப்பினர் அசோகன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் பார்த்திபன் நன்றி கூறினார்.

புவனகிரி

இதேபோன்று, புவனகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை செயலாளர் சஞ்சய் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். துறையூர் வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பிற தாலுகா அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்