கொடைக்கானலில் ரூ.90 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு

கொடைக்கானலில் ரூ.90 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-03 20:30 GMT

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் பஸ் நிலையத்தை சீரமைத்தல், ஏரி பகுதியில் அபிவிருத்தி பணிகள், புதிய காய்கறி அங்காடி அமைக்கும் பணி, பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறைகள், ஆடு, மாடு வதைக்கூடம், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் அபிவிருத்தி பணிகள் என ரூ.90 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சரவணன், மண்டல செயற்பொறியாளர் மனோகரன், நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஆணையாளர் நாராயணன், பொறியாளர் முத்துக்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி பகுதியில் ரூ.24 கோடியில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற கோடை சீசனுக்குள் இந்த பணிகள் முடிவடையும். கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் ரூ.35 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைய உள்ளது. மேலும் கொடைக்கானல் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான இடத்திலும் ஒரு அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானலில் குப்பைகள் அகற்றும் பணி, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. நகரில் உள்ள 1,918 மின்விளக்குகள் தரம் உயர்த்தப்பட்டு எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட உள்ளது. மேலும் 600 இடங்களில் புதிய மின்கம்பங்களுடன் கூடிய மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்ற கூட்டம் நடைபெறும் அரங்கம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்