வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
வேலூர் மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார்.;
வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கி மாநகராட்சி 4 மண்டலங்களிலும் நடைபெற்று வரும் குடிநீர், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், அந்த பணிகள் நிறைவடையும் காலம் குறித்து உதவி கமிஷனர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் மேயர் கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைவாக குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக பணியாற்றினால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய், குடிநீர், பாதாள சாக்கடை, சாலை அமைக்கும் பணிகளை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதில், வேலூர் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.