திருநாவலூரில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருநாவலூரில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.;
சோழர் கால கல்வெட்டு
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவிலில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் ஆகியோர் களஆய்வு செய்தனர்.
அப்போது கோவிலின் உள்ளே அர்த்த மண்டபத்தின் நுழைவுவாயிலின் மேற்புறம் சுண்ணாம்பு பூசப்பட்ட நிலையில் கல்வெட்டு இருந்ததை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டு சுவஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி என்று தொடங்குகிறது. இதுகுறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது:-
வீராணம் ஏரி
இந்த கல்வெட்டானது சோழர் மன்னன் முதலாம் பராந்தகனின் கல்வெட்டாகும். முதலாம் பராந்தகன் கி.பி. 907 முதல் கி.பி. 955 வரை ஆட்சிபுரிந்தவன். இவனது பட்டத்து அரசியாக விளங்கியவள் கோக்கிழானடிகள். இவள் சேர மன்னனின் மகள். இவளுடைய மகன்தான் இளவரசன் ராஜாதித்தன், திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் சோழர் படை முகாம் அமைத்து சோழ நாட்டின் வடபகுதியை பாதுகாத்து வந்தவன். முதலாம் பராந்தக சோழனின் 28-வது ஆட்சியாண்டான கி.பி. 935-ல் சுந்தரரால் பாடல்பெற்ற தலமான திருதொண்டீஸ்வரம் (பக்தஜனேஸ்வரர்) சிவாலயத்தை இளவரசன் ராஜாதித்தன் கற்கோவிலாக மாற்றியுள்ளார். இதற்கு முன்பு காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள வீராணம் என்று அழைக்கப்படும் வீரநாராயண பேரேரியை சோழர் படை கொண்டு வெட்டினான். இதுவே சென்னையின் நீர் ஆதாரமாக தற்போது வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் புதிய வரவு
இந்த இளவரசன் ராஜாதித்தன் கட்டிய கோவிலுக்கு படைப்பிரிவில் இருந்த பல அதிகாரிகள், வீரர்கள், பணியாளர்கள் நன்கொடை அளித்துள்ளனர். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு அவரது மனைவி வீரசிகாமணி என்பவள் பராந்தக சோழனின் 31-வது ஆட்சியாண்டான கி.பி.938-ல் திருதொண்டீஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரத்து மகாதேவருக்கு திருநொந்தாவிளக்கு எரிப்பதற்கு 100 ஆடுகளையும், 170 பலம் எடை கொண்ட ஒரு ஈழ விளக்கும் கொடுத்துள்ளார் என்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதிலிருந்து ராஜாதித்தன் மனைவி வீரசிகாமணி என்பது தெரியவருகிறது. இது சோழர் வரலாற்றில் ஒரு புதிய வரவாக அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.